மனோஜின் இறப்பு குறித்து தம்பி ராமையா வருத்தத்துடன் பேச்சு!

மனோஜ் பாரதிராஜாவின் இறப்புக்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா பேசியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான மனோஜின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா நீலாங்கரையில் உள்ள வீட்டிர்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனோஜின் இறப்பிற்கான காரணம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

80 வயதை தாண்டிய பிறகு நிம்மதி இழந்து இருப்பது என்பது கொடுமையான செயல், எப்படி இறைவனுக்கு இப்படி எல்லாம் மனசு வருதுன்னே தெரியல. ஆன்மீகத்துல நாட்டமா இருக்கவங்களுக்கு கூட ஆண்டவன் மேல கோபம் வருது. அவர பாக்கவே முடியல. எவ்ளோ பெரிய கலை வித்தகர். அவர பத்தி பல நூறு வருஷம் நாம எல்லாம் பாரதிராஜா பாரதிராஜான்னு பேசலாம். ஒரு மாபெரும் மனிதனுக்கு பிள்ளையா பிறந்தது மட்டும் தான் மனோஜூக்கு வந்த ஸ்ட்ரெஸிற்கான காரணம்ன்னு நான் நினைக்குறேன்.

தம்பி மனோஜுக்கு 48 வயசு. முரளி சாரும் மனோஜும் படத்துல நடிச்சபோது, மனோஜ பத்தி முரளி சார் நிறைய சொல்லுவார். தம்பிக்குள்ள அவ்வளவு கனவு இருந்திருக்கு. அவ்வளவு திறமைகள் இருக்கு. அதை எப்படி வெளிய கொண்டுவர்றதுன்னு தெரியலன்னு சொல்லுவாரு. முரளி சார் 45, 46 வயசுல இறந்துட்டாரு. இந்த தம்பி 48 வயசுல இறந்திருக்கு.

இந்த வயசுல இன்னும் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். இந்த 2 பெண் பிள்ளைகளும் தந்தைய எப்படி எல்லாம் வச்சு பாக்கணும்ன்னு ஆசை பட்டிருப்பாங்க. இப்போ எல்லாம் ஒவ்வொரு நாளும் எப்படி விடியுதுன்னே யாருக்கும் தெரியல. ஒரு விஷயத்த இந்த தலைமுறை பிள்ளைங்க கத்துக்கணும். ஒரு விஷயம் நமக்கு வரலைன்னா அத தள்ளி வச்சுட்டு அடுத்த வேலைக்கு நாம போயிடனும்.

ஒரு பெரிய மனுஷனுக்கு பிள்ளையா பிறந்துட்டாலே இப்போ என்னப்பா பண்ற, அடுத்து எதும் வேலை செய்யலயா, உங்க அப்பா மாதிரி வரணும் இல்லையா, அவரு பேர காப்பாத்தனும் இல்லையாங்குற பதற்றத்துக்கு இந்த சமுதாயம் அவங்கள ஆளாக்கி விட்டுடுது. அவர்களால ஒரு சராசரி மனிதனா ரூம்குள்ள போய் யார்கிட்டயும் பேச முடியல. வீட்டுக்குள்ள கதவை சாத்திக்கிட்டு இருக்க ஸ்ட்ரெஸ்ஸோட விளைவு தான் இந்த 48 வயதோட மரணத்திற்கு காரணம்ன்னு ஒரு தனிப்பட்ட மனிதனா கிராமத்திலிருந்து வந்ததாக சொல்கிறேன். நிச்சயமா எல்லோரும் பாரதிராஜா சாரோட துயரத்தில பங்கெடுத்துப்பாங்க. அந்த பிதாமகருக்கு இந்த துயரத்த தாங்கக் கூடிய சக்திய கடவுள் கொடுக்கணும். இவ்வாறு அவர் கூறினார்.