இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் ஜூன் 2ஆம் தேதி அவருக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அண்மையில் லண்டனில் தனது முதல் சிம்பொனியான ‘Valiant’-ஐ அரங்கேற்றினார். முழுமையான சிம்பொனியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற இளையராஜாவுக்கு ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். லண்டன் செல்வதற்கு முன்னர் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவுக்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். லண்டன் சென்றுவிட்டு இளையராஜா திரும்பிய போது தமிழக அரசு சார்பில் அவரை விமான நிலையம் சென்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பின்னர் சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் தேதியை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடும் ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவின் திரையிசைப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 2 ஆம் தேதி இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இளையராஜா ஜூன் 3 ஆம் தேதி பிறந்தவர். தனது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி பிறந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக ஜூன் 2 ஆம் தேதியை தனது பிறந்தநாளாக இளையராஜா கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கருணாநிதி தான் இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தைச் சூட்டியவர். 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவுக்கு அறிமுகமான இளையராஜா, இசைத்துறையில் செய்தவை எல்லாம் அசாத்திய சாதனைகள். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளார். 50 ஆண்டு காலமாக திரையிசையில் கோலோச்சி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.