பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.
சாத்தூரில் பிறந்து வளர்ந்த ஷிவானி நாராயணன் 16 வயதிலேயே விஜய் டிவியில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக அவர் பங்கேற்கும் போது அவருக்கு வயது வெறும் 19 தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும், அதன் பின்னர் பெரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், படிப்புக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.
18 வயதில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்தனர். ஆனால் அப்போது மெச்சூரிட்டி இல்லை, எப்படி சமாளிப்பது என்கிற பயம் இருந்த நிலையில், தவிர்த்தேன். ஆனால், அடுத்த வருடமும் பிக் பாஸ் ஆஃபர் வந்த நிலையில் போய் தான் பார்ப்போமே என்கிற துணிச்சலுடன் சென்றேன். முதன்முறையாக அம்மா இல்லாமல் மூன்று மாதங்கள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னர், மிகப்பெரிய அளவிலான வரவேற்பு எனக்கு கிடைத்தது மிகவும் சந்தோஷத்தை அளித்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இன்னமும் திறம்பட விளையாடி இருக்க வேண்டும் என்று தோன்றியது என்றார்.
தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் நடிப்பில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் அனிகா சுரேந்திரனுக்கு பதில் முதன் முதலாக ஷிவானி நாராயணனை தான் தனுஷ் அணுகியிருக்கிறார். அவர் அழைத்ததும் ‘விஸ்டம் டூத்’ கடவாய்ப் பல் அகற்றியிருந்த வலியுடன் சென்றேன். உங்க பேருக்காகத்தான் உங்களை அழைத்தேன் என்றார். சிவனின் தீவிர பக்தர் தனுஷ். ஷிவானி என்பதால் தான் என்னை நடிக்க அழைத்ததாக கூறினார். ஹீரோவுக்கு செட்டாவேனா என்றெல்லாம் பார்த்தார். அடுத்த வாரம் கால் வரும் வந்துடுங்க என்றார். அதே போல கால் வந்தது. ஆனால், நான் தான் அந்த வாய்ப்பை சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக தவற விட்டேன். அதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறேன் என்றார்.
ஷிவானி நாராயணன் முன்பு இருந்தது போல இப்போது இல்லை என்றும் அவர் தன்னுடைய உதடுகளுக்கும் மூக்கிற்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருக்கிறார் என பல வதந்திகள் வலம் வருகிறது. அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்கிற கேள்விக்கு பதில் அளித்த ஷிவானி நாராயணன் காஸ்மெட்டிக் சர்ஜரி எல்லாம் சாதாரணமாக செய்துவிட முடியாது. மில்லியன் கணக்கில் செலவாகும். நான் டயட் இருந்து, உடற்பயிற்சி செய்து தான் இப்படி மாறினேன் எனக் கூறியுள்ளார்.
சினிமாவில் நடிக்க வந்தது ஏன் என்கிற யோசனையே வந்துவிட்டது என்றும் படிப்புக்காக சில ஆண்டுகள் புதிய படங்களை ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் சீக்கிரமே லண்டன் போய் செட்டில் ஆக முடிவு செய்திருப்பதாகவும் அந்த பேட்டியில் ஷிவானி நாராயணன் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.