நாம இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது: மிருணாளினி ரவி!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை ஹேமா கமிஷன் மூலம் விசாரணைக்கு கொண்டு வந்ததை பற்றி நடிகை மிருணாளினி ரவியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க அவர் கொடுத்த தக் லைஃப் பதில் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பிரபலத்தின் வாரிசாக இருந்தால் முதல் படத்திலேயே முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும், முதல் படத்திலேயே பெரிய இயக்குநர் இயக்க ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்துவிடும். ஆனால், மாடலிங் துறையில் பணியாற்றிக் கொண்டு எப்படியாவது சினிமாவில் சின்ன ரோல் கிடைத்தால் கூட போதும், அதை பிடித்துக் கொண்டு பெரிய நடிகையாகி விடலாம் என்கிற நோக்கத்தில் பலர் உழைத்து வரும் நிலையில், சில நடிகைகள் குறுக்கு வழியில் குறுகிய காலத்திலேயே டாப் நடிகைகளாக மாறிவிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் புலம்பல்களும் சக நடிகைகள் மத்தியிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது.

டப்ஸ்மாஷ் மூலம் டிரெண்டான மிருணாளினி ரவிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் ரோல் கிடைத்ததும் உடனடியாக ஏற்று நடித்த அவருக்கு அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் நடனமாடிய “மாலை டும் டும்” பாடலுக்கு ஏகப்பட்ட இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் போட்டு டிரெண்ட் செய்தனர். எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா மற்றும் ரோமியோ என வரிசையாக அவர் தேர்வு செய்து நடித்த பல தமிழ்ப் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், திடீரென பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

வெப்சீரிஸ் ஒன்றில் தற்போது நடித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய மிருணாளினி ரவியிடம் ஹேமா கமிஷன் குறித்த கேள்விகளும், அட்ஜஸ்ட்மென்ட் விவகாரங்கள் குறித்த கேள்விகளும் வந்து விழுந்த நிலையில், அதற்கு செம கூலாக பதிலளித்துள்ளார். “எனக்கு எந்த தொந்தரவும் வராம நானே பார்த்துக்கிட்டேன்.. எல்லாமே நம்ம கையில தானே இருக்கு, நாம இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது. பொதுவா இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னைகள் பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும், அதில், நாம் நிறைவாக இருந்தால், அல்லது போதுமென்ற மனம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்மை யாரும் தொட முடியாது” என்றார்.