குழந்தைகள், குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். குழந்தைகளிடம் தவறு இருக்கிறது என்றால், அது பெற்றோரிடம் இருக்கும் தவறுதான். இல்லையென்றால் ஆசிரியர்களிடம் இருக்கும் தவறுதான். இங்கு மாற வேண்டியது குழந்தைகள் அல்ல.. ஆசிரியர்கள்தான்.. பெற்றோர்தான் என்று சமுத்திரக்கனி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பங்கேற்று பேசினார். மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது:-
ஒரு சில கதைகளுக்காக இயக்குநராக நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும். என்னுடைய கையில் கொஞ்சம் காசு வந்து விட்டால், அதை மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்வேன். அப்படி நான் எடுத்த திரைப்படம்தான் அப்பா, சாட்டை உள்ளிட்டவை.. இந்த மாதிரியான திரைப்படங்களெல்லாம், உடனே ரசிகர்களிடம் சென்று சேராது. நேரம் பிடிக்கும்.
நீங்களெல்லாம் சூப்பர் ஸ்டார் படமென்றால், முதல் காட்சிக்கு செல்வீர்கள். இந்த மாதிரியான படங்களுக்கு வருவீர்களா?. இந்த திரைப்படங்களையெல்லாம், தாமதமாக டிவியில் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறதே என்று சொல்லி,சென்று விடுவீர்கள். ஆனால், இது போன்ற படங்களுக்கான உழைப்பு என்பது மிகப்பெரியது. கிட்டத்தட்ட நான் ஏழு வருடங்கள் சேர்த்து வைத்திருந்த காசை வைத்துதான் அப்பா திரைப்படத்தை எடுத்தேன். அந்தத் திரைப்படம் எனக்கு நஷ்டத்தை தான் கொடுத்தது. அதில், நான் பெரிதாக எதையும் சம்பாதிக்கவில்லை. ஆனால், அந்தப்படத்தை எடுத்ததால் எனக்கு கிடைத்த மனநிறைவும் மனதிருப்தியும் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது. நஷ்டத்தை பற்றியெல்லாம் கவலையே பட மாட்டோம்.
இந்த மாதிரியான வேலைகளை திரைத்துறையில் நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறோம். எப்போதும் நாங்கள் கூடினாலும் இதைப்பற்றி தான் பேசுவோம். நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டோம் என்றால், அது எப்போது வேண்டுமென்றாலும் மரமாக மாறும். அப்படி விதைக்கப்பட்டவன்தான் நான்.
குழந்தைகள், குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். குழந்தைகளிடம் தவறு இருக்கிறது என்றால், அது பெற்றோரிடம் இருக்கும் தவறுதான். இல்லையென்றால் ஆசிரியர்களிடம் இருக்கும் தவறுதான். இங்கு மாற வேண்டியது குழந்தைகள் அல்ல.. ஆசிரியர்கள்தான்.. பெற்றோர்தான். இவ்வாறு அவர் பேசினார்.