கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக: த்ரிஷா!

அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இணையத்தில் எதிர்மறை கருத்துகள் கூறுபவர்களுக்காக நடிகை த்ரிஷா காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, ப்ரியா பிரகாஷ் வாரியர், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் முதல் நாள் பெரியளவில் இருக்கும் என்று தமிழக விநியோகஸ்தர் ராகுல் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது இப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்து சில எதிர்மறை கருத்துகளும் இணையத்தில் உலவி வருகிறது. இது தொடர்பாக த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் கடும் காட்டமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் த்ரிஷா, “டாக்சிக் மக்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ்கிறீர்கள் மற்றும் நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக ஊடகங்களில் உட்கார்ந்து மற்றவர்களை பற்றி அர்த்தமற்ற விஷயங்களை பதிவிடுவது உங்களுடைய நாளை உண்மையிலேயே மகிழ்ச்சியடையச் செய்கிறதா? உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உண்மையில் வருத்தமாக இருக்கிறது. பெயரில்லா கோழைத்தனம் இது. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக” என்று தெரிவித்துள்ளார்.