மதராஸி’ படத்தினை செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறது. இப்படத்துக்கு இடையே தான் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பைத் தொடங்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் வெளியான அப்படம் படுதோல்வியை தழுவியது.
தற்போது ‘மதராஸி’ படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் இறுதிகட்டப் பணிகளை கவனித்துக் கொண்டே, இறுதிகட்டப் படப்பிடிப்புக்கும் தயாராகி வருகிறார். இதற்காக நடிகர்களிடம் தேதிகள் பெறப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவும் ஆயத்தமாகி வருகிறது.
இப்படத்தினை செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடும் வகையில் பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் ஓடிடி உரிமையினையும் விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது வரை இதன் இசை உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவை மட்டுமே விற்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், ருக்மணி வசந்த், ஷபீர், விக்ராந்த், அருண் வெஞ்சுரமுடு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்து வருகிறார்கள். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.