சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வருகிற மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் – 2 படத்தில் நடித்து வரும் கார்த்தி தனது 29-வது படமாக டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், சர்தார் – 2 படத்திற்குப் பிறகு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரண்மனை – 4, மதகஜராஜா என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் கேங்கர்ஸ் படத்தை இயக்கி நடித்துள்ள சுந்தர். சி அடுத்ததாக மூக்குத்தி அம்மன் -2 படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை முடித்த பின்னர் அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். இந்தாண்டு முடிவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.