சூர்யாவின் ‘ரெட்ரோ’ ட்ரெய்லர் வெளியானது!

‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூர்யா, கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ஆக்‌ஷன், ரொமான்ஸ், எண்டெர்டெய்ன்மெண்ட் என ஒரு முழு பேக்கேஜை தருவார் என்று நம்பிக்கை தருகிறது ட்ரெய்லர். அல்ஃபோன்ஸ் புத்திரனின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் வழக்கமான ஆக்‌ஷன் படங்களில் இருக்கும் அதிரடி இல்லாமல் சற்றே வித்தியாசமான பாணியில், அதே நேரத்தில் சுவாரஸ்யம் குறையாத வகையிலும் இருக்கிறது.

வேவ்வேறு கெட்-அப் களில் வரும் சூர்யா இம்முறை சொல்லி அடிப்பார் என்று தோன்றுகிறது. இதுவரை பார்க்காத பூஜா ஹெக்டேவை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ்ராஜ் என சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் ஈர்க்கின்றன.