பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ‘குட் பேட் அக்லி’.
இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கினார். முன்னதாக, துபாயில் நடந்த ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்று 2-ஆம் இடம் பிடித்தது.
இந்த நிலையில், தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போடியத்தில் நிற்கும் அஜித் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.