என் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என காஷ்மீர் பகல்காம் குறித்து தான் போட்ட போஸ்டிற்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு, காஷ்மீரில் நடந்த கொடும் படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம். இவ்வாறு விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் வெளியிட்டிருந்த பதிவில் காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பலர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதற்குதான் விஜய் ஆண்டனி மறு பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.