அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்று, அண்மையில் திருமணம் நடைபெற்ற எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ்- தீஷனா தம்பதியினரை வாழ்த்தினார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தவர் எஸ்பி வேலுமணி. அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்பி வேலுமணியின் கை, மேற்கு மாவட்டங்களில் ஓங்கி இருந்தது. எஸ்பி வேலுமணியின் மகன் விகாஸ்- தீஷனா திருமணம் அண்மையில் கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவிர அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் சென்றிருந்தனர். அதேபோல பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கு முன்னரே இரு கட்சிகளின் தலைவர்களும் எஸ்பி வேலுமணி இல்லத்தில் கூடி மகிழ்ந்து பேசியது ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்தன. பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கைகளை உரிமையுடன் பிடித்தபடி மணமக்களை வாழ்த்து சொல்ல வைத்தார் எஸ்பி வேலுமணி. இது அதிமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பின்னணியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள எஸ்பி வேலுமணி இல்லத்துக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்றார். ரஜினிகாந்தை எஸ்பி வேலுமணி குடும்பத்தினர் உற்சாகமாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ரஜினிகாந்துக்கு தமது குடும்பத்தினர் அனைவரையும் எஸ்பி வேலுமணி அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பின் போது புதுமண தம்பதிகளான விஜய் விகாஸ்- தீஷனா தம்பதியினரை ரஜினிகாந்த் வாழ்த்தினார். அத்துடன் புதுமண தம்பதிகளுக்கு தாம் போற்றி வணங்கும் குருஜி ‘பாபா’வின் படத்தை தமது அன்பளிப்பாகவும் நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். எஸ்பி வேலுமணி குடும்பத்தினருடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் ரஜினிகாந்த் விடைபெற்றுச் சென்றார்.
இது தொடர்பாக எஸ்பி வேலுமணி தமது எக்ஸ் பக்கத்தில், “எங்களது மகன் V.விஜய் விகாஸ் – C.T.தீக்ஷணா இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர்கள் எங்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்” என பதிவிட்டுள்ளார்.