‘ஜனநாயகன்’ டீம் என்னை ஏமாத்திட்டாங்க: சனம் ஷெட்டி!

பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக உதவி இயக்குனர் சொல்லி இருந்தார். ஆனால் பிறகு ஏமாற்றிவிட்டார் என்று குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

நடிகை சனம் ஷெட்டி ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கி கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமான தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டார் என்று பரபரப்பு புகார் கொடுத்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் போட்டியாளராக கலந்து கொண்ட போது பலருடைய நன்மதிப்பை பெற்று இருந்தார். ஆனாலும் அதிரடியாக சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டு இருந்தார். இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியா பக்கங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதற்கு குரல் கொடுத்து வருகிறார்.

அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி கொண்டிருக்கிறார். ஆனாலும் இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. இது குறித்து பல நேரங்களில் அவரே வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதாவது ஜனநாயகன் திரைப்பட குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று குற்றச்சாட்டை அந்த வீடியோவில் சனம் ஷெட்டி வைத்து இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது:-

ஜனநாயகன் டீம்ல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கிற ஒருத்தரிடம் தளபதியோட கடைசி படம் ஆச்சு அவர் கூட நடிக்க ஆசையாய் இருக்கு. இதற்கு, பிறகு நிறைவேறாது என்கிற ஒரு நம்பிக்கையில் ஒரு ஆறு மாசமா வாய்ப்புக்காக ஃபாலோ பண்ணிட்டு இருக்கிறேன்.

அவரும் வாய்ப்பு இருக்கு ஓகே ஆயிடும் என்றுதான் தான் சொல்லிக் கொண்டே இருந்தார். தப்பான வகையில் அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் என்னை அலைய வைத்திருக்கிறார். இப்போதுதான் எனக்கே தெரிகிறது. அந்த படத்தின் கடைசி ஷெட்யூல்தான் விஜய் நடிக்கிறார் என்று இப்போ எனக்கு தெரிய வந்தது. அதனால் அந்த உதவி இயக்குனரிடம் நான் இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் இனி நீங்க நடிக்க வாய்ப்பே இல்லை என்பது போல் சொல்கிறார். ஏன் இப்படி அலைய வைக்கிறீங்க என்று கேட்டால் நான் உங்களை ரெபர் பண்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று சொல்கிறார். மார்க்கெட் வேல்யூ இல்லாத ஹீரோயின் என்பதால் இப்படி அலைய விடுவீங்களா? இந்த பாரபட்சம் தான் பிரச்சனை.

இந்த பிரச்சனை தளபதி விஜய்க்கு தெரிய வாய்ப்பே இல்லை. அதனால் தான் நான் அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டேன். எனக்கு தளபதி விஜய் ரொம்ப பிடிக்கும். அவருடைய கொள்கைகளும். அவருடைய திறமையும் எனக்கு பிடிக்கும். ஆனால் அவருடைய படத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். வேறு எந்த காரணமும் கிடையாது. இவ்வாறு அந்த வீடியோவில் சனம் ஷெட்டி பேசியிருக்கிறார்.