“ஜெயம் ரவி யாருடன் திருமணத்திற்கு வருகிறார், யாருடன் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். இதனால், நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடவா போகிறது” என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே 16ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சந்தானம், கௌதமேனன், செல்வராகவன், கஸ்தூரி உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகை கஸ்தூரி பேட்டி அளித்திருந்தார். அதில், நடிகர் ஜெயம் ரவி கெனிஷா உடன் ஐசரி கணேஷ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அது அவரின் தனிப்பட்ட விஷயம், ஜெயம் ரவி யாருடன் திருமணத்திற்கு வருகிறார், யாருடன் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். இதனால், நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து விடவா போகிறது. அது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆர்த்தி அவர்களின் அறிக்கையை படித்தேன், ஒரு பெண்ணாக ஒரு மனைவியாக தன்னுடைய குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பலர் விமர்சிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், ஆர்த்தி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் பேசுவதற்கு தயாராக இருக்கிறார் என்று அர்த்தம். இதனால், இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் அவரிடமே கேளுங்கள். ஆனால், ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே என்ன பிரச்சனை நடக்கிறது என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். கணவன் மனைவி விவகாரத்தில் கருத்து சொல்கிறேன் என்று வந்து அவர்களின் குடும்பத்தில் நான் குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த கேள்வியை நான் தவிர்த்து வருகிறேன்.
இதையடுத்து தொகுப்பாளர் நயன்தாரா, வனிதா பற்றி பொது இடத்தில் தைரியமாக பேசிய கஸ்தூரி, ரவி, ஆர்த்தி பிரச்சனை பற்றி பேச தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, இந்த ரெண்டு விஷயமும் வேறு வேறு பிரச்சனைக்கூரியது, நயன்தாரா திருமணம் செய்து கொண்ட போது முதலில் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், அவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டபோது. அதில், எனக்கு இருந்த சட்ட சந்தேகத்தை நான் எழுப்பினேன். ஏனென்றால், இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு என்று தனியாக வழிமுறைகள் இருக்கிறது. அதை பின்பற்றினார்களா என்று கேட்டேன். அதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் பின்பற்றினார்கள் என்று விளக்கம் கொடுத்தார்.
அதேபோல, வனிதா, முறைப்படி விவாகரத்து வாங்காமல் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி அது மிகவும் தவறானது. அவருடைய மனைவி எலிசபெத் என்னிடம் முறையிட்டு உதவி கேட்ட பிறகு தான், நான் அவர்களுக்காக பேசினேன். அதன் பிறகு தான் வனிதா, அது திருமணம் இல்லை, திருமண ஒத்திகை என்று கூறி பிரச்சனையை முடித்தார். யாராக இருந்தாலும், என்னை நேரடியாக அணுகி பேசினால், நிச்சயம் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். ஆகையால், நயன்தாரா, வனிதா விஷயம் வேறு. ரவி, ஆர்த்தி விஷயத்தில் நான் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன் என்று கஸ்தூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.