பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தவிர்க்க ரவி மோகன் – ஆர்த்திக்கு உத்தரவு!

பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி தம்பதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷா உடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது சம்பந்தமாக ஆர்த்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகர் ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் இருதரப்பும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் இருவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்க வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதி, நடிகர் ரவி மோகன் ஆர்த்தி தம்பதியர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.