விஜய் ஆண்டனியுடன் ரவீனா டாண்டனுக்கு முக்கிய கதாபாத்திரம்!

விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரவீனா டாண்டன்.

‘மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் ஜூன் 27-ம் தேதி ‘மார்கன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அறிவித்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தினை ‘ஜென்டில்வுமன்’ படத்தினை இயக்கிய ஜோசுவா சேதுராமன் இயக்கவுள்ளார்.

‘லாயர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விஜய் ஆண்டனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவீனா டாண்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் ‘ஆளவந்தான்’ படத்துக்குப் பிறகு அவர் ஒப்பந்தமாகி இருக்கும் படம் இதுவாகும்.

ரவீனா டாண்டன் நடிக்கவுள்ள கதாபாத்திரம், விஜய் ஆண்டனி கதாபாத்திரத்துக்கு சரிசமமாக இருக்கும் என்று இயக்குநர் ஜோசுவா சேதுராமன் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் இருந்து முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு.