நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு காந்த் தேவா இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.
இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் வசந்தபாலன், அம்பிகா, பாத்திமா பாபு, மதியழகன், ஷகிலா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
வசந்த பாலன் பேசும்போது, “இங்கு பெண்களுக்கானக் குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. திரைப்படத் துறையில் இருந்து கொண்டு வனிதா நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது, மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு கதை உள்ளது. இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமுதாயம். இங்கு பெண்கள் அதிகமாகக் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
வனிதா பேசும்போது, “ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு படத்தை இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அவர் 2 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் எம்.எஸ்.ராஜூ, ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது” என்றார்.