அருப்புக்கோட்டை கோயிலுக்கு யானையை தானமாக வழங்கிய திரிஷா!

விலங்குகள் மீது தனி பிரியம் கொண்டுள்ள நடிகை திரிஷா, விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார். நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான எந்திர யானையை கோவிலுக்கு வழங்கி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா விலங்குகள் மீது தனிப் பிரியம் கொண்டவராக உள்ளார். இவர் பீட்டா அமைப்பிலும் உள்ளார். இந்த நிலையில் நடிகை திரிஷா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் பிரபல ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் ஜூலை 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகை திரிஷா இந்த கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார். அச்சு அசலாக யானை போன்றே இந்த எந்திர யானை தோற்றமளிக்கிறது. 3 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இதன் எடை 800 கிலோ ஆகும். நிஜயானையை போன்றே கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த எந்திர யானைக்கு கஜா என்று பெயர் வைத்து உள்ளனர். அச்சு அசலாகவே யானை போன்று தன் இரண்டு பெரிய காதுகளையும் ஆட்டிக்கொள்கிறது. தும்பிக்கையை மேலே தூக்குவது போன்றும், அவ்வப்போது வால்களை ஆட்டிக்கொண்டும் இருக்கிறது. இதேபோல் நிஜ யானை பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசி வழங்குவது போன்றும், தண்ணீரை பீய்ச்சியும் அடிக்கிறது. நேற்று இந்த யானையை கோவிலுக்கு வழங்கினர். அப்போது கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், கோவில்களில் யானைகள் துன்புறத்தப்படுவதை தவிர்க்கவே தன்னார்வ அமைப்பு மற்றும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தனர். நடிகை திரிஷாவும், சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் சேர்ந்து தான் இந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான எந்திர யானையை கோவிலுக்கு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக இதுபோன்ற எந்திர யானை கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தன்னார்வ அமைப்பு கேரளாவில் உள்ள கோவிலுக்கு வழங்கியிருந்தது.