தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சிலம்பரசன் (STR), சமீபத்தில் தனது கருணை உள்ளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய மோகன் ராஜ் மரணமடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் நடிகர் சிலம்பரசன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,00,000 வழங்கியுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரான பா.ரஞ்சித், 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, “வேட்டுவம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது ஒரு கேங்ஸ்டர் படம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வேட்டுவம் படம் முதலில் இது விக்ரம் படமா? அல்லது கமல் படமா? என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இது அட்டகத்தி தினேஷுக்காக எழுதப்பட்ட கதை என்று பா.ரஞ்சித் தெளிவுபடுத்தினார். இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த வாரம் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்தார். மோகன் ராஜின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மோகன் ராஜ் மங்காத்தா, விஸ்வாசம், கோட் போன்ற பல திரைப்படங்களில் கார் ஸ்டண்ட் காட்சிகளில் பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல என்றாலும், இந்த மரணம் மிகுந்த வேதனையை அளித்தது. வேட்டுவம் படக்குழுவினர் மோகன் ராஜுக்கு அஞ்சலி செலுத்தினர். சினிமா பிரபலங்கள் பலரும், பா.ரஞ்சித் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்க மாட்டார் என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மோகன் ராஜின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித், அவரது மரணம் தன்னை உலுக்கிவிட்டதாகவும், மீளா துயரில் இருப்பதாகவும் கூறினார். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை எனவும், தமிழக அரசு போதிய நிவாரணம் வழங்கினால் அவர்களது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் எனவும் இயக்குனர் செல்வமணி கோரிக்கை வைத்தார்.
கடந்த 10 வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டி வருவதாக ஸ்டண்ட் சில்வா தெரிவித்தார். இந்த செய்தி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் 100 பேருக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார் என்ற செய்தியும் வெளியானது. நடிகர் விஷால், மோகன் ராஜின் குழந்தைகளின் படிப்புச் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சங்கம் இருந்தும், அவர்களுக்கு முறையான காப்பீடு கிடைப்பதில்லை என்ற வேதனை நிலவுகிறது.
இந்நிலையில் மோகன் ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
