திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரசில் தினமும் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், அதன் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நேற்று இந்த ரயிலில் கழிப்பறை வரை கூட்டம் காணப்பட்டதால், பயணிகள் அதிருப்தியடைந்தனர். அறுபடைவீடுகளை இணைக்கும் வகையில் திருச்செந்தூரில் இருந்து பழனி வரை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பின்பு பொள்ளாச்சிக்கும், அதை தொடர்ந்து பாலக்காட்டிற்கும் நீட்டிப்பு செய்யப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ரயில், மீண்டும் கடந்த 16ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ரயில்வே துறை பல பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றியபோது, திருச்செந்தூர்- பாலக்காடு ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டது. இதனால் இந்த ரயிலின் கட்டணம் முன்பை விட அதிகரித்துள்ளது. இருப்பினும் பயணிகள் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லை. பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரயில் பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழநி,
ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பத்துரை, கொடைக்கானல்ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சிமணியாச்சி, தாழையூத்து, நெல்லை, பாளை, ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்கிறது. தென்மாவட்டங்களில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக பாலக்காடு செல்லும் ரயில் என்பதால், இந்த ரயிலுக்கென எப்போதும் தனிக்கூட்டம் உள்ளது.
திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சி செல்லும், இந்த ரயிலில் அனைத்து நிறுத்தங்களிலும் அதிகளவில் பயணிகள் ஏறுகின்றனர். வெறும் 10 பெட்டிகளை கொண்டு இந்த ரயில் இயக்கப்படுவதால், பயணிகள் சில சமயங்களில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியதுள்ளது. அதிலும் இரு பெட்டிகள் கார்டு பெட்டிகள் என கழிந்துவிடுகின்றன. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் இந்த ரயிலில் திருமங்கலத்தை தாண்டியவுடன் கழிவறை வரை கூட்டம் காணப்பட்டது.
இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள், மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக புகார்கள் அனுப்பினர். ரயிலில் பாலக்காடு வரை பயணிகள் எப்படி நின்று கொண்டே பயணிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த தியாகராஜநகர் செல்வக்குமார் கூறுகையில், ‘‘நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலின் ஒரு ரேக்கை(10 பெட்டிகள்) பயன்படுத்தியே திருச்செந்தூர்- பாலக்காடு ரயிலும் இயக்கப்படுகிறது.
பயணிகள் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றிய தெற்கு ரயில்வே, பயணிகள் தேவைக்கேற்ப அதில் பெட்டிகளை அதிகரிக்கவில்லை. கட்டணம் மட்டுமே உயர்ந்துள்ளது. திருச்செந்தூர்- பாலக்காடு ரயிலை 14 பெட்டிகளோடு இயக்கினால் மட்டுமே, பயணிகள் உட்கார்ந்து செல்ல வழிபிறக்கும். அதற்கான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே புத்தாண்டில் மேற்கொள்ள வேண்டும்.’’ என்றார்.