கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசாங்கம் அதன் இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் பாதிப்பு விகிதம் 4.89 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நகர சுகாதாரத் துறை தெரிவிக்கின்றன. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை 18,84,560 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 26,175 ஆகவும் உள்ளது.
டெல்லி சுகாதாரத் துறையால் ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்பட்ட சமீபத்திய உத்தரவில், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கோவிட்-19 படுக்கைகளின் எண்ணிக்கை 250-ல் இருந்து 450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ICU கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை 100-ல் இருந்து 178-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குரு தேக் பகதூர் மருத்துவமனையில், கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை முன்பு 100- ல் இருந்து 400-ஆக உயர்த்தப்பட்டதால், அதிகரிப்பு சுமார் 300 சதவீதமாக உள்ளது. ICU கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை முன்பு பூஜ்ஜியத்தில் இருந்து இப்போது 50-ஆக உள்ளது.
இரண்டு மருத்துவமனைகளையும் உள்ளடக்கி, கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை முன்பு 350-ல் இருந்து 850-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ICU கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கை இரண்டு மருத்துவமனைகளிலும் 100-ல் இருந்து 228-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, 154 கோவிட்-19 நோயாளிகள் டெல்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 4,358 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்தது.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த வாரம், தலைநகரில்கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. ஆனால் லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விகிதம் குறைவாக உள்ளது. நிலைமை மோசமாக இல்லை என்று கூறினார். தடுப்பூசி செலுத்தாத மற்றும் இயற்கையாகவே பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கும் விகிதத்திற்கு காரணம் என்று அவர் கூறினார்.