நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ‘ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மனிதர்களுக்கு சேவை செய்யவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட நம்மை நாமே மறுஅர்ப்பணம் செய்து கொள்ள உறுதி ஏற்போம்’ என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், ‘உண்மையான தொண்டு, கடவுளுக்கு நன்றி கூறுதல் ஆகியவற்றை கொண்டாடுவதுதான் ரமலான் பண்டிகை. இந்த பண்டிகை, தாராள மனநிலையையும், மக்களை ஒருவரை ஒருவருடன் பிணைத்து, நட்புறவு, சகோதர உறவையும் வலுப்படுத்த பயன்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்து செய்தியில், ‘இனிய ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புனித ரமலான் மாதத்தில் பிறை கண்டு ஈகைப்பெருநாள் கொண்டாடும் புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், ஈகை குணம், அருட்கொடை, அன்பு, அமைதி எல்லாம் செழிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.