இலங்கைக்கு தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்புவதற்கு ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டு பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பொது மக்களும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்று அங்கு நிலவும் சூழலை நேரடியா பார்த்து வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை டாலர். அதற்கு தீர்வு கொடுப்பதற்காக நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஒன்றரை மில்லியன் டாலர் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து உதவியாக சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக மோடி அவர்கள் சார்பில் மருத்துவம் காய்கறி உள்ளிட்ட வற்றை வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு கிடைத்த உதவி போன்று இலங்கைக்கு கிடைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது
மாநில அரசு கொடுத்திருக்கக் கூடிய உதவிகளை இலங்கை மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினர் அதனை வரவேற்று இருக்கிறார்கள். முதலமைச்சர் இலங்கை மக்களுக்கு அளிக்கக்கூடிய உதவிகளை இலங்கை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். கட்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.