மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதையடுத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும்; இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று கூறிவரும் பொதுமக்கள், தொழிற்சங்கத்தினர், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் புத்தமத குருமார்களும் இலங்கை அரசுக்கு எதிராக திரும்பியுள்ளதால் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபயவும் முடிவு செய்துள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இருப்பினும், நான் இதற்கெல்லாம் அசருபவன் இல்லை என்பது போல பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு இதுநாள்வரை மகிந்த வரவில்லை.
இந்த நிலையிவ், இன்று(புதன்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்றத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பில்லையில்லா தீர்மானம் கொண்டு வர தீர்மானித்துள்ளன. இதுதொடர்பான நோட்டீஸுக்கு நாடாளுமன்ற சபாநாயகரிடம் தரப்பட்டுள்ளதால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்கு செவி சாய்க்காமல் விடாப்பிடியாய் பதவியில் இருக்கும் மகிந்தவின் பிரதமர் பதவி தப்புமா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். மொத்தம் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு இருந்தால், அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசை அமைப்பதாக கோத்தபய உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை நேற்று நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனாவிடம் சமர்ப்பித்தது. ஒரு மசோதா, அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், மற்றொன்று அவரது அரசுக்கும் எதிரானது ஆகும். இந்த தகவலை சமகி ஜன பலவேகயாவும், அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவும் தங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து அதிபருக்கு எதிராக, இன்று (புதன்கிழமை) ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளன.சமகி ஜன பலவேகயா தாக்கல் செய்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அவரது மந்திரிசபையும் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும்.