நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் காற்றாலை மூலம் போதுமான மின்சாரம் கிடைப்பதால் அந்தக் காலக்கட்டத்தில் மின் உற்பத்தியை நிறுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

நேற்று 3 அலகுகள் நிறுத்தப்பட்டு 2 அலகுகளில் மட்டுமே 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 4 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.1வது அலகில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்போது 60,000 டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. 5 அலகுகளும் முழு வீச்சில் செயல்பட்டால் இந்த நிலக்கரி 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.