பல்லக்கில் சுமப்பது மரியாதை குறைவு கிடையாது எனவும், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கை சுமக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். நிகழ்ச்சியின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வு பட்டினப் பிரவேசம் என்றும், அனைவரின் அன்பைப் பெற்ற ஆதீனத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்திருப்பது சரியானது அல்ல என்றும், பாரம்பரிய நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார்.
மேலும் பல்லக்கில் சுமப்பது மரியாதை குறைவு கிடையாது எனவும், பல்லக்கு தூக்கும் 22 பேரும் விருப்பத்தின் பேரிலேயே தூக்குவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கை சுமக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வு என்பது சுமார் 400 ஆண்டுகளாக இருப்பது என்றும், அதற்கு தடை விதித்திருப்பது சரியானது என்றும் 18 ஆதீனங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இதனால், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்ட நிலையில், குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன் அனைத்து கட்சியினருக்கும் அவரவர் கருத்தைக் கூறும் உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மதம் சார்ந்த நிகழ்வுக்கு தடை விதித்துள்ளது தவறானது என்றும், தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர், ஒருசிலர் தங்களின் தவறுக்காக பட்டணப் பிரவேச விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கின்றனர். தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என கூறினார்.
இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டினப்பிரவேசத்தை பாஜக நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தருமபுர ஆதீன நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தமிழக பாஜக தயாராக இருக்கிறது! என்று தெரிவித்துள்ளார்.