போலீஸ் காவலில் இருந்த இளைஞர் விக்னேஷ் வலிப்பு நோய் காரணமாகவே இறந்தார் என்று சென்னை போலீஸ் கூறி வரும் நிலையில், அவரது உடம்பில் 16 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 25 வயது இளைஞர், கடந்த மாதம் 18 ஆம் தேதி இரவு கஞ்சாவுடன் ஆட்டோவில் பயணித்தாக கூறிய தலைமை செயலக காலனி காவல் நிலைய போலீசார் அவரை அன்றிரவு போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணை கைதியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் அடுத்த நாள் காலை போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்தார். மாநில முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வலிப்பு நோயின் காரணமாகவே விக்னேஷ் இறந்ததாக சென்னை போலீசார் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
விக்னேஷின் உடலை போலீசாரே அவசர அவசரமாக தகனம் செய்ய முயன்றது, அவரது குடும்பத்துக்கு வான்ட்டடாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தது என இந்த மரணத்தில் போலீசாரின் நடவடிக்கைகள் ஏற்கெனவே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை. அதில், ‘ விக்னேஷின் உடம்பின் பல்வேறு இடங்களில் மொத்தம் 16 காயங்கள் இருந்ததாகவும், அவரின் உடம்பு முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வலது முன்னங்கால் எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும், தலையிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷுக்கு வலிப்பு நோய் எல்லாம் கிடையாது, அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என அவரின் குடும்பத்தினர் கூறி வரும் நிலையில், அவர்களின் சந்தேகத்தை மெய்ப்பிக்கும் வகையில் பிரேத பரிசோதனையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் விக்னேஷ் இறந்தாரா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மறுநாளே அவர் மரணமடைந்தது எப்படி? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை எழுப்பியுள்ளது.