ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு; 42 ஆசிரியர்கள் கைது

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 42 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் கடந்த 27ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதற்காக மாணவர்கள், தேர்வுக்கு தயாராகினர். முதல் நாளில் தெலுங்கு வினாத்தாள், தேர்வு தொடங்கிய 1 மணி நேரம் கழித்து வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டது. 2வது, 3வது நாட்களிலும் வெளியாகின. முதல் நாள் முதல் நேற்று வரை ஆந்திர மாநிலத்தில் பல மாவட்டங்களில் வினாத்தாள்கள் சிறிது நேரத்திலேயே கசிந்தன. வினாத்தாள் வழங்கிய சில நிமிடங்களிலேயே தெலுங்கு, ஆங்கிலம், கணக்கு போன்ற பாட வினாத்தாள்கள் கசிந்தன.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக இருந்த ஆசிரியர்கள் சிலர், தங்களது செல்போனில் வினா தாள்களை படம் எடுத்து அதனை வௌியில் உள்ள சிலருக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள், பதிலுக்கு விடையை புகைப்படம் எடுத்து, பல தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் கல்வி துறை அமைச்சர் சத்தியநாராயணாவுக்கு தெரியவர கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 42 ஆசிரியர்கள் வினாத்தாள் கசிவுக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், கர்னூல் கல்வித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் 5 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.