கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பள்ளி கல்வித்துறை!

கூகுள் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வாயிலாக 181 கோடியே 3 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் நன்னெறிக் கல்வியைக் கற்பிக்கவும் ‘இளந்தளிர் இலக்கியத்திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தின் சிறந்த சிறார் படைப்பாளிகளான இளங்கோ, ஞா.கலையரசி, வெற்றிச்செழியன், உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதாஜோ, பொற்கொடி, உதயசங்கர், சாலை செல்வம் மற்றும் ஆதி வள்ளியப்பன் ஆகிய 10 எழுத்தாளர்களின் அழகிய ஓவியங்களுடன் கூடிய 23 சிறார் படைப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

குழந்தைகளின் எழுத்தார்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட மூன்று இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கவிமணி விருதும், விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன்படி, கவிமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வி ர.சக்தி, செல்வி ந.சுபிஷா, செல்வன் ம. ருத்ரவேல் ஆகியோருக்கு முதலமைச்சர் பரிசுத்தொகையையும், சான்றிதழையும், கேடயத்தையும் வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக “Google Read Along” என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.