நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 பழங்குடியின கிராமங்களில் உடனடியாக சாலைகளை அமைக்க தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம் போதிமலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழூரில் இருந்து வடுக மேலூர் வரையிலான 23 கி.மீ. தூரத்திற்கும், புதுப்பட்டியிலிருந்து கெடமலை வரையிலான 11 கி.மீ. தூரத்திற்கும் சாலைகளை அமைக்க தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சாலைகளை அமைக்க மரங்களை வெட்ட அனுமதி கோரி மனுதாக்கல் ஒன்றை அளித்தது. இதன் பேரில் உச்சநீதிமன்றம், உயர் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை அமைத்து, வெட்டப்பட வேண்டிய மரங்கள் தொடர்பான அறிக்கையை கேட்டறிந்தது.
இதை தொடர்ந்து கீழூரில் இருந்து வடுக மேலூர் வரையிலான 23 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் சாலைக்கு 260 மரங்களையும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரையிலான 11 கி.மீ. சாலைக்கு 102 மரங்களை வெட்டவும் அனுமதி வழங்கலாம் என்றும், இவ்வாறு வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகள் நடுவதற்கும், அதனை முறையாக பராமரித்து, கண்காணிக்கவும் அக்குழு ஒரு பரிந்துரையை உச்சநீதிமன்றத்திற்கு வழங்கி இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த பழங்குடியின கிராமங்களுக்கு உடனடியாக சாலைகளை அமைக்க தமிழக அரசிற்கு அனுமதி அளித்து உத்தரவை பிறப்பித்தது.
குறிப்பாக, இந்த கிராமங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலை வசதி இன்றி தவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2 பழங்குடியின கிராமங்களுக்கு சாலை அமைக்கப்படுவது அம்மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.