ராஜஸ்தானில் கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கு தொடர்பாக ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக கொலை வழக்கில் கைதாகும் நபர்கள் தங்களுக்கு தண்டனை கிடைக்க கூடாது என்பதற்காக சாட்சிகளை மிரட்டுவதும், ஆதாரங்களை அழிப்பதும் அவ்வப்போது நடக்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான 2 பேர் தொடர்பான ஆதாரங்களை குரங்கு திருடி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாந்த்வாஜி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சசிகாந்த் சர்மா என்பவர் 2016 செப்டம்பரில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் சாண்ட்வாஜி பகுதியை சேர்ந்த ராகுல் கண்டீரா, மேகான்லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு தொடர்பாக கத்தி உள்பட 15 வகை ஆவணங்களை போலீசார் சேகரித்து வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீசார் ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட வழக்கு தொடர்பான 15 ஆதாரங்கள் பையில் வைத்து நீதிமன்றம் எடுத்து வந்தனர். ஆதாரங்கள் சேமிக்கும் அறையில் இடமில்லாததால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தின் அடியில் அந்த பையை அவர்கள் வைத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் குரங்கு ஒன்று மரத்தில் இருந்து இறங்கி வந்து கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை தூக்கி சென்றது. போலீசார் குரங்கை பின்தொடர்ந்து பையை மீட்க முயன்றனர். இருப்பினும் அது அவர்களுக்கு கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தரப்பில் ‛ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி சென்றுவிட்டது. இதனால் ஆதாரங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம் வேண்டும்’ என எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரினார். இதற்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டிஜிபிக்கு உத்தரவிடப்பபட்டுள்ளது.