அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜனதா கட்சியின் பாரதிய ஜனதா யுவா மோர்ச்சாவின் தேசிய செயலாளர் தஜிந்தர்பால் சிங் பக்சா. டெல்லியில் வசித்து வருகிறார். இன்று தஜிந்தர் வீட்டுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வந்தனர். அவர்கள் தஜிந்தரை கைது செய்து அழைத்து சென்றனர். மத விரோதத்தை ஊக்கு வித்தல், மிரட்டல் ஆகிய குற்றசாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சன்னி சிங் அளித்த புகாரில், மார்ச் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தஜிந்தர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்தார் என்றும், வன்முறையை தூண்டும் வகையில் பேசினார் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக தஜிந்தரை கைது செய்து டெல்லியில் இருந்து மொகாலிக்கு காரில் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தஜிந்தரின் தந்தை கூறும்போது, 10க்கும் மேற்பட்ட பஞ்சாப் போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். எனது மகனை கைது செய்யும்போது நான் செல்போனில் வீடியோ எடுத்தேன். அப்போது போலீசார் எனது முகத்தில் குத்தினர். செல்போனையும் பறித்துக்கொண்டனர். தஜிந்தரை வீட்டுக்கு வெளியே இழுந்து சென்றனர் என்றார்.
இது தொடர்பாக ஆம் ஆதத்மி எம்.எம்.ஏ. ரமேஷ் பல்யான் தனது டுவிட்டர் பக்கத்தில் பா.ஜனதா தலைவர் தஜிந்தர் பக்கா பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவரை கைது செய்தனர் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தஜிந்தர் தந்தை டெல்லி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகனை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே தஜிந்தரை பஞ்சாப் போலீசார் மொகாலிக்கு அழைத்து செல்லும் வழியில் அரியானா மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். தஜிந்தர் கடத்தப்பட்டதாக டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அரியானா போலீசார் விசாரித்தனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.