ஏமனில் துாக்கு தண்டனையிலிருந்து கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை: ஜெய்சங்கர்

ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் .

கேரள மாநிலம், கொல்லங்கோட்டை சேர்ந்த நிமிஷபிரியா(33), மேற்காசிய நாடான ஏமனில், நர்சாக வேலை செய்து வந்தார். தன்னை காதலிக்க கோரி துன்புறுத்திய, ஏமனை சேர்ந்த தலால் அப்துல் மஹ்தியை, 2017ல் நிமிஷா கொலை செய்தார். இந்த வழக்கில், 2018ல் நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, கேரள ராஜ்யசபா எம்.பி., ஜான் பிரிட்டாஸ், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், ‘நிமிஷா விவகாரத்தில் தலையிட்டு, துாக்கு தண்டனையிலிருந்து அவரை காப்பாற்ற வேண்டும்’ என கோரியிருந்தார். இதையடுத்து, ஜான் பிரிட்டாசுக்கு ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில், ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனில், மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. நிமிஷப்பிரியாவை, துாக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அவர் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என, தெரிவித்துள்ளார்.