போலீசார் உஷாராக இருக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர்!

கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் மோசடி கும்பலிடம், இரண்டு போலீசார் 1.45 கோடி ரூபாயை இழந்துஉள்ளனர். மற்ற போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை போலீசில் பணிபுரிந்த போலீஸ்காரர் ஒருவர், ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டில் ஈடுபட்டு, ஊதியம் மற்றும் சேமிப்பு தொகையை இழந்தார். இதன் காரணமாக, 2021, செப்., 10ல் உயிரிழந்துள்ளார். தற்போது, மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், ‘கிரிப்டோ கரன்சி’ மற்றும் அது சார்ந்தவற்றில் பண முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து வருகின்றனர். இதை உண்மை என நம்பி, போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார்பண முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

சமீபத்தில் இரண்டு போலீசார், ‘பிட் காயின் டிரேடிங் மற்றும் பிட் பண்ட் மைனிங் இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தில் 1.45 கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இந்த முதலீடுக்கான விளம்பரமும் சமூக வலைதளம் வாயிலாகத் தான் பரப்பப்பட்டுள்ளது. ஏமாற்றப்படுகிறோம் என்பதை கூட போலீசார் அறியாமல், அடுத்தடுத்து முதலீடு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய போலீசார் சிலர், போலி விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை நம்பி ஏமாறுகின்றனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். கவர்ந்து இழுக்கும் அறிவிப்புகளை நம்பி ஏமாறாமல், நியாயமான முறையில், வங்கிகளில் சேமிப்பு மற்றும் முதலீடுகள் செய்து, போலீசார் ஆதாயம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.