அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை!

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த சமயத்தில் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மாற்றம் நடத்துநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி, செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாகச் சென்னை மத்திய குற்றப் பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதே விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் செந்தில் பாலாஜியை 2021ஆம் ஆண்டு முதல் விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்த 3 வழக்குகள் தொடர்பான ஆணவங்களை வழங்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை முதலில் விசாரித்த எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் இதைத் தள்ளுபடி செய்தது. இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அமலாக்கப் பிரிவினர் மேல்முறையீடு செய்தனர். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் – எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய ஆய்வுக்குப் பின்னர் ஆவண நகல்களை வழங்க உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர். இந்தச் சூழலில் தான் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகம் வரும் 9ம் தேதியும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 12ஆம் தேதியும், அமைச்சர் செந்தில் பாலாஜியை 13ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது.

இதனிடையே குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஏற்கனவே ஆவணங்களை அளிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வழக்கு விசாரணை எதற்கு நடைபெறுகிறது என்று விளக்கம் கேட்டு அமலாக்கத்துறைக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் கிடைக்கவில்லை என்பதால் இந்த சம்மனுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வு விசாரணை செய்தது. குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.