ஐதராபாத்தில் மாற்று மத பெண்ணை திருமணம் செய்த நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ. இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் காதலித்து கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தம்பதியர் சொந்த ஊரை விட்டு வெளியேறி ஐதராபாத்தின் சரோர் நகரில் குடியேறினர். இதற்கிடையில், தனது சகோதரி சுல்தானாவும் அவரது காதல் கணவர் நாகராஜூவும் சரோன் நகரில் இருப்பதை அறிந்த சுல்தானாவின் சகோதரன் சையது மொபின் முகமது தனது உறவினர் மசுத் அகமதுவுடன் பைக்கில் சரோர் நகருக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றுள்ளனர்.
சரோர் நகரின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் நடுவே சுல்தானாவும் அவரது கணவர் நாகராஜூவும் பைக்கில் சென்றபோது அந்த பைக்கை முகமது இடைமறித்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் நாகராஜூவின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த நாகராஜூ நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனது சகோதரன் தனது கணவனை தாக்குவதை தடுக்க சுல்தானா முயற்சித்துள்ளார். ஆனால், அவரை தள்ளிவிட்டு விட்டு முகமது நாகராஜூ மீது கொடூரமாக தொடர்ந்து தாக்கினார். இந்த சம்பவத்தை சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்த கொடூர நிகழ்வும் அரங்கேறியுள்ளது. தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு சுற்றி இருந்தவர்களிடம் சுல்தானா கெஞ்சியபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை. இந்த தாக்குதல் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளிகள் முகமது மற்றும் அகமதுவை கைது செய்தனர். இந்த கொடூர கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் மாற்று மத பெண்ணை திருமணம் செய்த நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி நேற்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், சரோர் நகரில் நடந்த ஆணவ கொலையை நாங்கள் கண்டிக்கிறோம். பெண் விருப்பப்பட்ட திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். பெண்ணின் கணவரை கொலை செய்ய பெண்ணின் சகோதரனுக்கு எந்த உரிமையும் இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி இது குற்ற சம்பவம் மற்றும் இஸ்லாமிய மதப்படி இது மோசமான குற்றமாகும். இந்த சம்பவத்திற்கு நேற்று முதல் வேறு நிறம் கொடுக்கப்படுகிறது. குற்றவாளியை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லையா? குற்றவாளியை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இந்த கொலைகாரர்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படமாட்டோம் என்றார்.
இந்நிலையில் சம்பவத்தின் போது சுற்றியிருந்தவர்களிடம் உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் வரவில்லை. சிலர் வீடியோ எடுத்தனர் என, கொல்லப்பட்டவரின் மனைவி கூறியுள்ளார். கொலை சம்பவம் குறித்து தற்போது சுல்தானா கூறியதாவது:-
நானும் என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம் திடீரென்று இரண்டு பைக்குகள் வந்தன, அதில் ஒருவன் எனது அண்ணன் என்பது முதலில் எனக்கு தெரியவில்லை. அவர்கள் என் கணவரை கீழே தள்ளிவிட்டு இரும்பு தடியால் அடிக்க ஆரம்பித்தார்கள். தடுக்க முயன்ற என்னை அண்ணனின் நண்பர்கள் தள்ளிவிட்டனர். 30 முறை அடித்திருப்பார்கள். நான் உதவி கேட்டு கெஞ்சினேன். சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். 20 பேரால் நான்கு பேரை தடுக்க முடியாதா. என் கணவர் இறந்தும் நான் உயிருடன் இருக்கிறேன். காரணம் எனது அண்ணன் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். அவன் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.