13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை!

கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரேஷ் மார்ஸ்கோல். தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 13 ஆண்டுகளுக்கு முன் இறுதியாண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 ஆம் தேதி தனது பெண் தோழியை கொலை செய்து உடலை ஆற்றுக்கு அருகே புதைத்ததாக கூறி காவல் துறை கைது செய்தது. உடலை புதைப்பதற்காக தன்னுடைய வாகனத்தை கேட்டதாக மூத்த மருத்துவர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்திரேஷ் மார்ஸ்கோலை போலீசார் கைது செய்தனர். அதன் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த போபால் நீதிமன்றம், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி சந்திரேஷ் மார்ஸ்கோலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சந்திரேஷ் மார்ஸ்கோல் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். பல ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் சந்திரேஷ் மார்ஸ்கோல் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காவல்துறையினரின் குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதாக இல்லை எனவும் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரை கடுமையாக சாடியுள்ளது. “பழங்குடியின மாணவர் சந்திரேஷ் மார்ஸ்கோலை பொய்யாக குற்றம்சாட்ட வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் காவல்துறை இந்த விசாரணையை நடத்தியுள்ளது. அவர் தனது வாழ்க்கையில் 13 ஆண்டுகளை இழந்து இருக்கிறார். கைதாகும்போது அவரது வயது 23. இப்போது 36. எந்த பண இழப்பீட்டை கொண்டும் இந்த காலத்தை நிரப்பிவிட முடியாது. முன்முடிவுடன் நடத்தப்பட்ட இந்த விசாரணையால் உண்மையை பலிபீடத்தை வைத்து போலீசார் கொன்றுள்ளனர். இதில் அவரும் பலியாகி இருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பாகுபாடு, அடக்குமுறை, இழிவு போன்றவை நாம் எதிர்கொள்ள மறுக்கும் உண்மைகள் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

காவல்துறையின் பொய் வழக்கால் 13 ஆண்டுகளை இழந்த மருத்துவ மாணவர் சந்திரேஷ் மார்ஸ்கோலுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய பிரதேச அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த நிதியை வழங்காவிட்டால், அது செலுத்தப்படும் காலம் வரை 9% வட்டி விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.