தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மரங்களை பாதுகாக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அரசுத்தரப்பு வழக்கறிஞர் அரசாணையை தாக்கல் செய்தார். ஆனால், மாவட்ட அளவிலான குழுவில் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மாநில அளவிலான குழுவில் எந்த நிபுணர்களும் இடம் பெறவில்லை எனவும், குழுவுக்கு தலைமைச் செயலாளர் தலைமை வகிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட குழுக்களைப் போல மாநில அளவிலான குழுவில் இரு நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி, அதுசம்பந்தமான அரசாணை அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.