இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்
இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன். அவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக மத்திய அரசின் அனுமதியை அவர் கோரிய நிலையில், அதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அரிக்கான டெண்டர் கோரப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரிசியை தமிழக அரசு அதிக விலைக்கு வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை அனுப்பிடும் நடவடிக்கையை முதல்வர் துரிதப்படுத்தினார். அ தன்படி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி இறுதிப்படுத்திட தாமதமாகும் நிலையில் உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் அரிசி ஆலை அதிபர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி, குறுகியகாலத்தில் உற்பத்தி செய்ய முடிந்த 51 ஆலைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விநியோக ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இலங்கை அரசு ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து உள்ள அரிசிக்கு இணையான, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி-45, கோ-51 போன்ற உயர்ரக அரிசி இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு, 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளது. இவற்றை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்துச் செலவு, பை உட்பட கிலோ ஒன்றிற்கு ரூ.33.50 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில விசமிகள் வழக்கமாக விசத்தைக் கக்கும் விதமாக இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய்க்கு வாங்காமல் அதிகமாகக் கொடுத்து வாங்கிவிட்டது போல் சமூக ஊடகங்களில் எழுதுகின்றனர். இது தவறான பொய்ப் பிரச்சாரமாகும். ஒன்றிய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு, 20 ரூபாய் விலையில் இந்திய உணவுக் கழகம் வழங்கக்கூடிய கூடிய அரிசியானது, நமது நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் மாநில அரசுகள் விநியோகிப்பதற்கும் மாநில அரசின் திட்டங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ஆகும். இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது. இதனால்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த இந்திய உணவுக் கழக அரிசியை, இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.
இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.