சுகாதாரமற்ற ஷவர்மா கடைகளை மூட உத்தரவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட சிலர் பாதிக்கப்பட்டனர். ஷவர்மா என்பது மேலை நாட்டு உணவு. இறைச்சிகளை துண்டுகளாக வெட்டிக் கொடுக்கிறார்கள். அந்த நாடுகளில் உள்ள குளிர்ச்சியான தட்பவெப்ப நிலைக்கு ஷவர்மா உகந்ததாக இருக்கும். நமது நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு விரைவில் கெட்டுப்போகும். நாள்பட்ட கெட்டுப்போன மாமிசத்தை சாப்பிட்டால் பாதிப்பு வரும். எனவே ஷவர்மா உணவு சாப்பிடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டதும், மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். விதிகளை மீறிய சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் ஷவர்மா உணவுகளை வைத்து விற்கும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஷவர்மா உணவிற்கு தடை விதித்துள்ளார்கள். நாம் தற்போது அதிகாரிகளின் ஆய்வின் அடிப்படையில் ஆலோசிக்கிறோம்.

கேரளாவில் பரவி வரும் தக்காளி வைரஸ் பற்றி முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கேரள சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசித்து விவரங்களை கேட்டுப்பெற்றுள்ளார். அந்த வைரஸ் பாதிப்பு இங்கு யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.