போதை ஏறல!: உள்துறை அமைச்சருக்கு மதுப்பிரியர் கடிதம்!

போதை ஏறவில்லை எனக் கூறி, உள்துறை அமைச்சருக்கு, மதுப்பிரியர் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை செய்பவர் லோகேஷ் சோதியா. இவர், கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, மதுபானக் கடை ஒன்றில், 4 குவாட்டர் மதுபானங்களை வாங்கி உள்ளார். இதில், தனது நண்பருடன் சேர்ந்து, இரண்டு மதுபான பாட்டில்களை அருந்தி உள்ளார். எனினும் மது அருந்தியும் போதை ஏறவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து லோகேஷ் சோதியா கூறியதாவது:

மதுக்கடை ஒன்றில் 4 குவாட்டர் மதுபானங்களை வாங்கினேன். இதில் இரண்டு குவாட்டர் மதுபானங்களை நண்பருடன் சேர்ந்து அருந்தினேன். ஆனால் மது அருந்தியும் போதை ஏறவில்லை. சம்பந்தப்பட்ட மதுக்கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதை நிரூபிப்பதற்காக, அப்போது வாங்கிய மேலும் இரண்டு மதுபான பாட்டில்களை உடன் வைத்துள்ளேன். இதை அதிகாரிகளிடம் ஆய்வு செய்ய வலியுறுத்துவேன். நான் பல ஆண்டுகளாக மது அருந்தி வருகிறேன். மதுவின் போதை குறித்து எனக்கு நன்றகாகத் தெரியும். உணவு, எண்ணெய் போன்றவற்றில் கலப்படம் நடப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மதுபானத்திலும் கலப்படம் நடக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இது தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் மாவட்ட கலால் துறை ஆணையருக்கு, லோகேஷ் சோதியா புகார் அனுப்பி உள்ளார். கலால் ஆணையரைத் தொடர்பு கொண்ட போது, சோதியாவின் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சோதியாவின் வழக்கறிஞர் நரேந்திர சிங் தாக்டே கூறியதாவது:

நுகர்வோர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கைத் தாக்கல் செய்வோம். எனது வாடிக்கையாளர் பல ஆண்டுகளாக குடித்து வருகிறார். உண்மையான மற்றும் போலி மதுபானங்கள் எவை என, அவருக்கு வித்தியாசம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.