எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது, என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதிக்கு சென்று, அங்கு நிலவும் சூழல் குறித்து எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அமித் ஷா கூறியதாவது:
எல்லைப் பகுதிகளில், போதுமான வளர்ச்சி திட்டங்கள் முன்பு அமல்படுத்தப்படவில்லை. அது, மக்கள் புலம்பெயர வழிவகுத்தது. இதன் காரணமாகத்தான், அப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த, பி.எஸ்.எப்., அதிகாரிகளுக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகள், ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.