தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் தமிழை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொலியில் கலந்து கொண்டு பேசியதாவது:-
தாய்மொழியில் சிந்திக்கும் குழந்தைகளின் திறன் மேம்பட்டதாக இருக்கும். தாய்மொழியான தமிழில் படித்ததால் தான் என்னால் அறிவியலில் சாதனை படைக்க முடிந்தது. இதை நான் பெருமையாக சொல்கிறேன். நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப பல நாடுகள் முயற்சி செய்தன. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் நிலவுக்கு சந்திரயான் செயற்கைகோள் முதல் முயற்சியிலேயே அனுப்பி வெற்றி பெற்றோம். மங்கள்யானுக்கும் விண்கலத்தை அனுப்பினோம். தமிழர்களுக்கு இயல்பாகவே அறிவாற்றல் அதிகம். தாய்மொழியில் படிக்கும்போது சுயமாக சிந்திக்க முடிகிறது. அந்த சுயசிந்தனை தான் கூர்மையான அறிவுக்கு அடித்தளமாக அமைகிறது. தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும். இயல், இசை, நாடகத்தை அடுத்து அறிவியலில் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.