லோக் ஆயுக்தாவை ரத்து செய்து காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: வீரப்ப மொய்லி

நாட்டில் பெருவாரியான மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை இன்னும் அமல்படுத்தவில்லை. இதனால் நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

சிக்பள்ளாப்பூரில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் லோக் ஆயுக்தாவை அப்போதைய காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. இதனால் காங்கிரஸ் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஏனென்றால் தற்போது மாநிலத்தில் ஊழல் மலிந்து விட்டது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது லோக் ஆயுக்தாவுக்கு அதிக அதிகாரம் அளித்திருந்தேன்.

லோக்பால் மசோதாவை அமல்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. ஆனால் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் லோக்பால் மசோதாவை மாநிலங்களில் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பெருவாரியான மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை இன்னும் அமல்படுத்தவில்லை. இதனால் நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. எனவே லோக்பால் மசோதாவை மாநில அரசுகள் அமல்படுத்த மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்ய முன்வரவேண்டும். இதன் மூலம் மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை சுலபமாக தடுக்க முடியும். கர்நாடக பா.ஜனதா கட்சியில் 2 பேர் முதல்-மந்திரி பதவிக்கு தகுதியானவர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் முதல்-மந்திரி ஆகும் தகுதி உடையர்களாக உள்ளனர்.

ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் ஜனதா ஜலதாரே நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வெளிப்படையாக தெரிகிறது.

இதற்குமுன் ஏன் குமாரசாமி ஜனதா ஜலதாரே நிகழ்ச்சி நடத்தவில்லை. ஜனதா தளம் (எஸ்) ஆட்சியில் ஹேமாவதி நீரை ஒலேநரசிப்புரா வரை மட்டும் கொண்டு வந்தனர். ஆனால் நான் முதல்-மந்திரியான பின் ஹேமாவதி நீரை சென்னராயப்பட்ணா, துமகூரு, நாகமங்களா வரை கால்வாய்கள் மூலம் கொண்டு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.