நாட்டின் நலனுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து கட்டாயம் இருக்கும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனமான கோயம்புத்தூர் ஸ்டார்ட் அப் அகாடமி சார்பில் ஸ்டார்ட் அப் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவோருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. அதன்படி ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கான “ஸ்டார் ஆப் துருவ்” விருது வழங்கும் விழா கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:
ஸ்டார்ட் அப் தொழில்களைத் துவக்க ஆக்கப்பூர்வமான கொள்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொடர்ந்து நிலையான உதவிகளைச் செய்து வருகிறது. கொள்கை அளவில் துவக்க நிலையில் ஸ்டார்ட் அப் முதலீடு செய்வோருக்கு வரி விலக்கு அளிப்பது, 3 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு போன்றவை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இது, வரி விதிகளைச் சீராக்குவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனங்களை உயர்த்திக் கொள்ளவும், சிரமான முதலீடுகளை எளிமையாக்கவும் உதவுகிறது. இன்னும் பல உதவிகள் ஸ்டார்ட் அப் இன்டியா இணையத்தளத்தில் விளக்கப்பட்டுள்ளன.
சுயமாகச் சான்று பெறுதல், 9 வகையான சூழல் உடன்பாடுகள், தொழிலாளர் சட்டங்கள், ஸ்டார்ட் முதலீடுகளுக்கென சிட்பி நிதியின் நிதி வசதிகள், கடன் உறுதி திட்டங்கள் போன்ற வசதிகள் உள்ளன. இவற்றோடு மட்டுமல்ல, கூடுதலாகத் தொழில் மையங்கள் மற்றும் உருவாக்க ஆய்வகங்களையும் அரசு நிறுவியுள்ளது. பல்வேறு தொழில்நுட்பம் அல்லது இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்ட் அப்களுக்கு, இந்த மையமும், ஆய்வகமும் ஊக்கமளிப்பதாக உள்ளது.
தங்களது புதிய கண்டுபிடிப்பை ஆய்வு செய்து மேம்படுத்தவும், உற்பத்தியைத் திறம்பட மேற்கொள்ளவும் உதவுகிறது. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த “நிதி” NIDHI (தேசிய புதுமை பயன்பாடுகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்) அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஸ்டார்ட் அப் களாக மேம்படுத்தி, அவற்றின் மாதிரிகளை உருவாக்கி, அதன் பயணத்தை விரைவுபடுத்த ஆரம்ப நிலை நிதியுதவிகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
நமது நாட்டில், பல நூற்றாண்டுகளாகத் தொழிலோ, உற்பத்தியோ, விவசாயமோ செய்து வந்தனர். நடுவில் பல தரப்பட்ட இடையூறுகள் காரணமாக, உற்பத்தி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், நம் நாட்டில் இருக்கும், தொழில் செய்யக்கூடிய, இயற்கையாக உள்ள தத்துவத்தை முழுமையாக உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதற்காகத் தேவையான கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த 2021 நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறைக்கு என பிரத்தியேக இடம் எங்கும் இருக்காது என்பதைக் கொள்கையாகவே அறிவித்தோம். பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தனியார்த் துறைகளும் வரலாம். இதனால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களிலும் தனியார் துறையினர் வரலாம். நாட்டின் நலனுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து கட்டாயம் இருக்கும். தனியார் துறையினருக்கு எங்கு வணிக வாய்ப்பு கிடைக்கிறதோ, அவர்கள் அங்கு முதலீடு செய்யலாம். அதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.