புதுச்சேரி மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: கவர்னர் தமிழிசை

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை கூறினார்.

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சரக்கு – சேவை மற்றும் மத்திய கலால் வரி ஆணைய அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம், புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ, இணை ஆணையர் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஊர்வலத்தை கவர்னர் தமிழிசை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கவர்னர் தமிழிசை கூறியதாவது:

புதுச்சேரி மாநிலம் தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி எந்த அளவிற்கு வசூலிக்கப்படுகிறது; அது மக்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. மேலும், வரி செலுத்துவது அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஊக்கப்படுத்தும்.

தற்போது 8,000 பேர் வரி செலுத்துகின்றனர். அது மேலும் அதிகரிக்கும். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாலும், மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இந்த வளர்ச்சி கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.