இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் வரும் 23ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் இடம்பிடித்துள்ளார். இவர் இந்திய அணியில் முன்கள வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக், இளம் வயது முதலே ஹாக்கி மீது தீராத காதல் கொண்டவர். முதல் முறையாக அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெற்றோரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு தமிழக வீரரான மாரீஸ்வரன் சக்திவேல் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ளார். மாரீஸ்வரன் கோவில்பட்டியை சேர்ந்தவர். அவரது தந்தை தீப்பெட்டி ஆலை தொழிலாளி ஆவார். சிறு வயதில் இருந்து ஹாக்கி விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த மாரீஸ்வரனுக்கு நிறைய ஸ்பான்சர் கிடைத்தார்கள். கனிமொழி எம்.பி., கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் உதவிகள் வழங்கி உள்ளனர். இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.