புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் பரிசு!

இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் டேனிஷ் சித்திக்கிற்கு ‘புலிட்சர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதழியல், இலக்கணம், இசை சார்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் டேனிஷ் சித்திக் ஆகியோருக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை உள்ளிட்ட துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நிருபர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரர் சன்னா இர்ஷாத், அமித் தேவ், டேனிஷ் சித்திக் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

கொரோனாவின் போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக feature photographs என்ற பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டேனிஷ் சித்திக் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்டும் காட்சிகளை படம் பிடித்ததற்காக புலிட்சர் விருது பெறுகிறார். இதன் மூலம் டேனிஷ் சித்திக் இரண்டாவது முறையாக புலிட்சர் விருது பெறுகிறார். முதன்முறை, ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்கள் புலிட்சர் விருதை பெற்றன.

டெல்லி வன்முறை, அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, ரோஹிங்கியா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பதற்றமான சூழல்களை தனது புகைப்படத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தியவர் டேனிஷ் சித்திக்.

இந்தியாவில் கொரோனா தொற்றும், மரணமும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தபோது, கங்கை நதிக்கு அருகே கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் வரிசையாக போடப்பட்டு எரிக்கப்படுவதையும், ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் மாஸ்க்கோடு நோயாளிகள் காத்திருப்பதையும் தானிஷ் சித்திக் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகையே உலுக்கின.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும், அந்நாட்டின் ராணுவப் படைகளுக்குமான போரில் அமெரிக்கா தனது ராணுவப் படைகளை அனுப்பி தாலிபன் பயங்கரவாதிகளை அழிக்க ஆப்கன் படைகளுக்கு உதவியது. ஆப்கான் படையினரோடு இணைந்து தகவல் சேகரிக்கச் சென்ற தானிஷ் சித்திக், அங்கு நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இரண்டாவது முறையாக புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி, “ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் மற்றும் புகைப்படக்காரர்கள் அட்னன் அபிதி, அமித் தேவ் காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ ஆகியோருக்கு, இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்தியதற்காக 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும் மனிதநேய ஆர்வலர்கள் மறைவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.