புதுச்சேரி ஜிப்மரின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை எரித்த தோழர்களைக் புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையின் பதிவேடுகள் அனைத்தையும் இந்தியில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாக நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இந்திய நாடாளுமன்ற ஆய்வுக் குழுவினரைக் காரணம் காட்டி, ஜிப்மரில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, இனி வருங்காலத்தில் அவற்றை இந்தியில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். இந்தியில் மருத்துவ நூல்களே இல்லாத நிலையில், ஜிப்மருக்காக வாங்கப்படும் மருத்துவ நூல்களில் 50 விழுக்காடு இந்தியில் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஜிப்மரில் இந்திக்காரர்களும் வெளி மாநிலத்தவரும் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவும், தமிழரிடையே இந்தியைத் திணிக்க வேண்டுமென்றும் இச்சுற்றறிக்கை திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஒன்றியத்தின் அலுவல் மொழி தமிழே என புதுச்சேரி அரசு தமிழ் அலுவல் மொழிச் சட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒன்றியப் பகுதிக்குள் செயல்படும் ஜிப்மர் நிர்வாகம் அதனை மதித்து – தமிழையே அலுவல் மொழியாகச் செயல்படுத்த வேண்டும். தமிழர்களின் வேளாண் நிலங்களும், வளங்களும் அழிக்கப்பட்டு, அதன் மீதே ஜிப்மர் மருத்துவமனை எழுப்பப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையின் பயனாளிகளும் தமிழர்களே! எனவே, ஜிப்மர் மருத்துவமனையின் கோப்புகளும், பதிவேடுகளும் தமிழில் இருப்பதே சரியானது; ஞாயமானது!
ஜிப்மர் நிர்வாகம், இந்தித் திணிப்பு வெறியுடன் வெளியிட்டுள்ள இச்சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
ஜிப்மரில் 90 விழுக்காட்டுப் பணிகளை தமிழர்களுக்கே ஒதுக்கு! 10% விழுக்காட்டுக்கு மேல் பணியில் உள்ள இந்திக்காரர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து வெளி மாநிலப் பணியாளர்களையும் வெளியேற்ற வேண்டும்!
ஜிப்மரில் இலவச மாத்திரை மருந்துகள் நிறுத்தப்பட்டு மாத்திரை மருந்துகள் தனியாரால் விற்பனை செய்யப்படுகிறது. உயிரைக் காக்க ஓடி வருகின்ற ஏழை எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆகவே மாத்திரை மருந்துகள் தனியார் விற்பனைச் செய்வதைத் தடுத்து, வழக்கம்போல நோயாளிகளுக்கு இலவசமாக மாத்திரை மருந்துகளை வழங்க வேண்டும்!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவமனை முன்பு இன்று புதன் காலை 10.30 மணியளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை நகலை எரித்துப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், உலகத் தமிழ்க் கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகள் பங்கேற்றன. போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி தலைமை தாங்கினார்.
கோரிமேடு முதன்மைச் சாலையில் சுப்பையா திருமண மண்டபம் அருகில் உள்ள ஜிப்மர் இரண்டாம் நுழைவுவாயில் நோக்கிப் பேரணியாகச் சென்ற தோழர்களைக் காவல்துறையினர் பாதியிலேயே வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். அங்கே முழக்கமிட்ட தோழர்கள் ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட இந்தித் திணிப்பு சுற்றறிக்கை நகல்களை தீயில் போட்டுக் கொளுத்தினர். பதாகையாக அச்சிடப்பட்ட சுற்றறிக்கையைக் கிழித்தெறிந்தனர். இதனால் ஆத்திரமுற்ற காவல்துறையினர் அனைவரையும் பலவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். 30 பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளது.
போராட்டத்தில் உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலச் செயலாளர் முத்.அம். சிவக்குமார், தமிழர் களம் புதுச்சேரி அமைப்பாளர் கோ. அழகர், கவிஞர் புதுவை வேலா, பேராசிரியர் ஆனந்தன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலப் பொருளாளர் ம.செ. இளங்கோவன் தொழிற்சங்க செயலாளர் த. இரமேசு, மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. கௌரி, தமிழ்த் தேசியப் பேரியக்க புதுச்சேரி தெற்கு கிளைச் செயலாளர் தோழர் அசோக்ராசு, வடக்குக் கிளைச் செயலாளர் தோழர் சத்தியமூர்த்தி, தோழர்கள் மணிகண்டன், அன்புநிலவன், ஐயா ஆறுமுகம், ஐயா முருகவேல், விசயகணபதி, விஜயரங்கம், மகளிர் ஆயம் செயலாளர் தோழர் சத்தியா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.