மகிந்த ராஜபக்சே உள்பட இலங்கையில் ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் இந்தியாவுக்கு தப்பி ஓடியதாக இலங்கையில் செய்திகள் பரவின.
அண்டை நாடான இலங்கையில், 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கரைந்து போனது. இறக்குமதி நின்று போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதேநேரத்தில், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர். இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கி இருப்பதாக கூறுகிறது. இப்படி தொடர்ந்து பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ள இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்து உள்ளார். இலங்கையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
இதனிடையே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக இலங்கையில் பரவலாக செய்திகள் பரவின. ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள இந்திய தூதரகம், ”இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்திய தூதரகம் அத்தகைய தகவல்களை திட்டவட்டமாக மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளது